யாழ். அரியாலையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் : அநுர அரசின் நிலைப்பாடு
யாழ். அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான நீதித்துறையின் செயற்பாடுகளுக்கு அநுர அரசாங்கம் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வியத்தினை யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
சித்துப் பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) அரசாங்கம் நீதியான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்டமை தொடர்பில் அமைச்சரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மனித எச்சங்கள் மீட்பு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சித்துப் பாத்தி மயானத்தில் தகனமேடை அமைப்பதற்காக குழி தோண்டப்பட்ட போது மனித எச்சங்கள் வெளிவந்தன.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்திய நிலையில் குறித்த இடத்தை நீதிபதி மற்றும் சட்ட வைத்திய அதிகாரி சென்று பார்வையிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நீதிபதி கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராய உள்ளதாக அறிந்தேன்.
ஆகவே கடந்த காலங்களைப் போன்று நீதிமன்ற விவகாரத்தில் நாங்கள் தலையிடப் போவதில்லை அரசாங்கம் என்ற வகையில் நீதித்துறையின் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகள் பு.கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
