கிழக்கில் கண்ணிவெடி அகழும் போது வெளிவந்த மனித எச்சங்கள்
திருகோணமலை (Trincomalee) - சம்பூர் கடற்கரை ஓரமாக கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித எச்சங்கள் வெளிவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து இன்று (20) குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை (17) மூதூர் - சம்பூர் கடற்கரையோர பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
கண்ணிவெடி அகழும் பணி
சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி எனப்படுகின்ற கண்ணிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டிருந்ததோடு கண்ணிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையிலேயே இன்றையதினம் (20) குறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற கட்ளையை பெறுவதற்காக குறித்த பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே மனித எலும்புப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

