மூதூரில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது...!
திருகோணமலை மாவட்டம் சம்பூரின் கடற்கரைச்சேனையில் இன்று(17) நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழரசு கட்சி உறுப்பினர்கள், சம்பூர் காவல்துறையினரால் கைது செய்துசெய்யப்பட்டுள்ளனர்.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமிழரை நினைவுகூரும் இந்த நிகழ்வில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாதையில் காந்தள் பூ பதாதை இடம்பெற்றிருந்தது.
காவல்துறையின் நடவடிக்கையால் குழப்பம்
முதலில் அமைதியாக நடைபெற்ற நிகழ்வுக்கு பின்னர், சம்பூர் காவல்துறையினர், சமூகப் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுத்தமையினால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்த ம துரைராஜா விக்னேஸ் (மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் தமிழரசு திருகோணமலை கிளை இளைஞரணி தலைவர்,) பிரகலாதன் (பிரதேசசபை உறுப்பினர்) மற்றும் மோகன் (தமிழரசு கட்சி, மூதூர் கோட்ட செயலாளர்) ஆகியோரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
பதாதை தொடர்பில் விசாரணை
இவர்களிடம், நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட பதாதை தமிழீழத்தை குறிப்பதாக இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், தமிழர்கள் தங்களது உறவுகளை நினைவு கூரும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலாகும், இலங்கை அரசியலமைப்பும், சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளும் மீறப்படுவதாகவும் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் இயக்கம் – வடகிழக்கு தெரிவித்துள்ளது.
ஒரு பூவின் ஊடாக தமிழரின் பாரம்பரியத்தினை வெளிப்படுத்தப்படுவது கூட குற்றமாக்கப்படும் நிலையில், இனப்படுகொலையை நினைவுகூரும் உரிமை மீறப்படுவது, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிராகும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்..
இதனையடுத்து, ஐ.நா., சர்வதேச தூதரகங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
