ஜெனிவா களத்தை எதிர்கொள்ள இலங்கை வகுத்த திட்டம்
இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இதுவரையில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என பிராந்திய உறவுகள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய ( Taraka Balasuriya) தெரிவித்தார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் குறித்தும், இலங்கையின் நிலைப்பாடு குறித்தும் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை கூறியிருந்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு மாத்திரம் இலங்கையின் நடப்பு விவகாரங்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றன.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இலங்கைக்கு எதிராக செயற்படும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு சில காரணிகளை மாத்திரம் முன்னிலைப்படுத்திக்கொண்டு காலம்காலமாக விமர்சனங்களை மாத்திரம் முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஆனாலும், ஜெனிவா விவகாரத்தை வெற்றிகொள்ள அரசாங்கம் சிறந்த பொறிமுறையை வகுத்துள்ளது” என்றார்.