பயங்கரவாத தடைச்சட்டத்தின் தொடர் பாவனை : சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை!
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இந்த சட்டம் தடை செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டிற்கு சிறிலங்கா அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் எனவும் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
தமிழர் தாயகப்பகுதிகளில் மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற 9 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம்
இலங்கையில் சிறுபான்மையினர் மற்றும் குடிசார் சமூக ஆர்வலர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு குறித்த சட்டம் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டம் மாற்றியமைக்கப்படும் என சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்ததிருந்தாலும், அந்த உறுதி மொழியை தொடர்ந்தும் மீறி வருவதாக அந்த அமைப்பு சாடியுள்ளது.
உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது கொடூரமான துஷ்பிரயோகம் எனவும், தொடர்ச்சியாக ஒரு சமூகம் ஒடுக்கப்படுவதற்கான எடுத்துக்காட்டு எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினத்தவர்களை குறிவைக்கும் அரசாங்கம்
சிறுபான்மையினத்தவர்களின் இறந்தவர்களை நினைவு கூரும் செயற்பாடுகளை அரசாங்கம் தடுப்பது மதம், நம்பிக்கை கருத்து சுதந்திரம் ஆகியவற்றை மீறும் செயற்பாடு என அவர் கூறியுள்ளார்.
நல்லிணக்கம் தொடர்பில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் கருத்து வெளியிட்டாலும், அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை மேலும் ஆழப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் சர்வதேச பங்காளர்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை விமர்சித்துள்ளன.
அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான விமர்சனங்களை ஒடுக்குவதற்கும், அரசாங்கம் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |