மாங்குளத்தில் தனியார் காணியொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் வைத்து மனித எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
காணியின் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்து பல நாட்களாகிய நிலையில் எலும்புக்கூடு மாத்திரம் காணப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (04.10.2025) மாலை குறித்த பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் இதனை அவதானித்து மாங்குளம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தடயவியல் பரிசோதனை
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் காவல்துறையினர் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (05.10.2025) காலை குறித்த இடத்திற்கு வருகை தந்த தடயவியல் ஆய்வுக் குழுவினர் , சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இடத்தில் வைத்து மண்டையோடு, மனித எலும்புகள், சிறு தொகை பணம், விஷ மருந்து மற்றும் ஆடைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நபரின் அடையாளம் மற்றும் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



