இலங்கையை குறுகிய காலத்தில் மீட்டெடுத்தேன்:ரணில் பெருமிதம்
என்னிடம் இருந்த திட்டத்தாலும் அனுபவத்தாலும் சர்வதேச தொடர்புகளாலும் நரகத்தில் விழுந்த இலங்கையை குறுகிய காலத்தில் மீட்டெடுத்தேன் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
மேலும் ஒற்றுமையுடனும் பொது உடன்பாட்டுடனும் முன்னோக்கிச் சென்றால், இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக விரைவில் உயர்த்த முடியும் என்றும் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய (09)நாடாளுமன்ற அமர்வில் ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் வலியுறுத்து
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட ரணில், இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை விட்டு தனிப்பட்ட இலட்சியங்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது மாபெரும் அழிவின் ஆரம்பமாக அமையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாம் எவ்வாறு செயற்படுகின்றோம் என்பதைப் பொருத்தே எமது எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று சுட்டிக்காட்டிய அதிபர் அன்று தம்மை நாட்டுக்குத் துரோகம் செய்தவர்களாக முத்திரை குத்திக்கொள்ள போகின்றார்களா அல்லது நாட்டின் மீது அன்பு கொண்டவர்கள் என்ற அடையாளத்தை பெறப் போகின்றார்களா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமின்றி, மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சமூகம், அரச சார்பற்ற அமைப்புகள், வெவ்வேறான சிந்தனைகளை கொண்ட தலைவர்கள், சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடியவர்கள் உள்ளிட்ட சகலரும் பொது உடன்பாட்டுடன் இணைந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் அதிபர் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |