பதவி நீக்கப்படவுள்ள தேசபந்து: முக்கிய தரப்பினருக்கு பறந்த கடிதம்!
இடைநிறுத்தப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்குமாறு சபாநாயகர் தலைமை நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நிலையியற் கட்டளைகளின்படி, தலைமை நீதிபதி இந்தக் குழுவிற்கு ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும், அதே போல் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரால் பரிந்துரைக்கப்படும் ஒரு நிபுணரையும் நியமிக்க வேண்டும்.
அதன்படி, இந்த குழு அடுத்த வாரம் தனது விசாரணையை தொடங்கும் என்று அறியப்படுகிறது.
பதவி நீக்கும் முடிவு
இடைநிறுத்தப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை நியமிக்கும் பிரேரணை கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் 151 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
விசாரணையை முடித்த பிறகு, இந்தக் குழு சபாநாயகரிடம் முழு அறிக்கையையும் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் அறிக்கையை ஆய்வு செய்த பிறகு, தேசபந்துவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவு சமீபத்தில் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
