யாழில் முன்னாள் எம்பி சரவணபவனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் (Saravanapavan Eswarapatham) ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது இன்று (15) காலை 10 மணியளவில் மானிப்பாயில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் யசோதா சரவணபவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி யசோதா சரவணபவனால் பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.
இதனையடுத்து வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான அனுசன், சுபாகர், சமூக செயற்பாட்டாளர் வானேஸ்வரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு கோரிக்கை
இந்நிலையில், இன்று (15) மாலை இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) பங்கேபற்றுதலுடன் தெல்லிப்பழை பேருந்து நிலையத்திலும் நாளை (16) ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், (17) ஆம் திகதி வேலணையிலும், (18) ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும். இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும்.
மேலும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்பொழுது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு தமிழரசுகட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினர் கோரியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |