சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட ஏழு பேருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!
சட்டவிரோதமான முறையில் டொலர் பரிவர்த்தனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 7 இளைஞர்களுக்கு கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள சொகுசு விடுதியில் வைத்து 75 மில்லியன் ரூபாயினை அமெரிக்க டொலர்களாக மாற்றும் பரிவர்த்தனையில் ஈடுபட்ட, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 இளைஞர்களுக்கே கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
"கைது செய்யப்பட்ட ஏழு பேரும் கடந்த வெள்ளிக்கிழமை (08) கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று (13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு 03 இல் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் சீன பிரஜைகள் குழுவொன்று கைத்துப்பாக்கியுடன் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல தடவைகள்
பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ராகமவில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பணி புரிபவர்கள் என்பதும், அந்த நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட காசோலையை அமெரிக்க டொலரில் மாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டதன் மூலம் இந்த தொகையை பெற்றுக் கொண்டதும் தெரியவந்துள்ளது.
இந்தப் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள தயாராக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்திருந்தனர், மேலும் ஒரு டொலருக்கு 316 ரூபாய் மற்றும் ஒரு டொலர் மறுவிற்பனைத் தொகை 320 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்வது இது முதல் தடவை இல்லை என்றும் இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறான நாணயப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் குழு ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |