மேற்கு இந்தியப் பெருங்கடலில் மீன்பிடியில் ஈடுப்பட்ட இலங்கைப் பிரஜை : விதிக்கப்பட்டது அபராதம்
சீஷெல்ஸ் நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கைப் பிரஜை ஒருவருக்கு 41,000 டொலர்கள் (550,000 சீஷெல்ஸ் ரூபாய்) அபராதம் விதித்து சீஷெல்ஸ் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்த இலங்கைப் பிரஜைக்கு நேற்றைய தினம் (21) நீதிமன்றத்தில் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சீஷெல்ஸ் நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கைப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறைந்தபட்ச தண்டனை
இடைமறித்து பிடிக்கப்பட்ட, ரன்குருல்லா 4 என்ற கப்பலுக்குப் பொறுப்பான 43 வயதான மகவிட்ட லியனகே திலேஷ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதனாலும் அவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுள்ள குடும்பத்தின் தலைவர் என்பது மாத்திரமல்லாமல் அவரது வருமானத்தை நம்பி அவரது குடும்பம் இருக்கின்ற காரணத்தால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வழக்கின் தலைமை நீதிபதி தீர்மானித்துள்ளார்.
மேலும், தாம் பிடித்த மீன்கள் சீஷெல்ஸ் மீன்பிடி அதிகார சபையினால் சேகரிக்கப்பட்டு 35,320 சீஷெல்ஸ் ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் இலங்கைப் பிரஜை நீதிமன்றில் தெரிவித்தார்.
18 மாதங்கள் சிறைத்தண்டனை
இந்நிலையில் 41,000 டொலர்கள் (550,000 சீஷெல்ஸ் ரூபாய்) அபராதத்தினை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் குற்றவாளி 18 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்திலும் 18 வெளிநாட்டு கப்பல்கள் சீஷெல்ஸின் பொருளாதார வலயத்தில் இடைமறித்து கைது செய்யப்பட்டன, அதில் எட்டு பணியாளர்களை ஏற்றிச் சென்ற இலங்கையிலிருந்து வந்த ஒரு கப்பலும் இருந்தது தெரியவந்துள்ளது.
மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமான சீஷெல்ஸ், 1.4 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தைக் கொண்டுள்ளது, இந்தத் தீவு நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |