பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் சட்டவிரோத குடியேறிகள் - இவ்வாண்டின் இதுவரையான விபரங்கள் வெளியீடு
படையெடுக்கும் சட்டவிரோத குடியேறிகள்
பிரித்தானியாவிற்குள் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதி வரை 25 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகள் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரவேசித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை 19 சிறிய படகுகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 915 பேர் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் பிரவேசித்துள்ளனர்.
ஆங்கிலக் கால்வாய் ஊடாக ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 8 ஆயிரத்து 747 பேர் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்துள்ளதுடன், கடந்த வாரத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 733 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை நாளொன்றில் அதிகபட்சமாக ஆயிரத்து 295 பேர் பிரித்தானியாவிற்குள் படகு மூலம் பிரவேசித்துள்ளனர்.
இவ்வாண்டின் இதுவரையான விபரங்கள்
அந்த வகையில் இவ்வாண்டின் இதுவரையான காலப் பகுதி 25 ஆயிரத்து 146 பேர் படகுகள் மூலம் பிரித்தானியா வருகைதந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்போரை ருவாண்டாவில் குடியேற்றும் திட்டத்தை ப்ரீத்தி பட்டேல் வெளியிட்டு நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும், குடியேறிகளின் வருகை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட பின்னர் 19 ஆயிரத்து 878 பேர் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்துள்ளனர்.
எனினும் சட்டவிரோத குடியேறிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டமானது நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், கடந்த ஜுன் மாதம் சட்டவிரோத குடியேறிகளை ருவாண்டாவிற்கு கொண்டுசெல்லும் நடவடிக்கை தடைப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்தி
ஒரேநாளில் பிரித்தானியாவுக்குள் நுழைந்த 1295 குடியேறிகள் - வரலாற்றில் புதிய உச்சம்

