சட்டவிரோத குடியேறிகளின் பிரித்தானிய வருகை - புதிய பிரதமர் வேட்பாளர்கள் அளித்துள்ள உறுதிமொழி
பிரித்தானியாவிற்குள் சட்டவிரோத குடியேறிகளின் வருகை
பிரித்தானியாவிற்குள் சட்டவிரோத குடியேறிகளின் வருகையை கட்டுப்படுத்துவதாக ஆளும் கென்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்களான ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.
அந்த வகையில் பிரித்தானியாவில் குடியேறுவதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாகவும் இருவரும் உறுதியளித்துள்ளனர்.
பிரித்தானியாவின் ஆளும் கென்சவேட்டிவ் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்படும் வேட்பாளர், நாட்டின் பிரதமர் பொறுப்பிற்கும் நியமிக்கப்படவுள்ளார்.
இந்த நிலையில், தலைமைத்துவ பதவிக்கு ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் போட்டியிடும் நிலையில், புகலிடத்திற்கு தகுதியானவர்கள் யார் என்ற வரையறையை கடுமையாக்குவதாகவும், அகதிகள் எண்ணிக்கையில் வரம்புகளை அறிமுகப்படுத்துவதாகவும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
சட்டவிரோத குடியேறிகளை ரூவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம்
பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேறிகளை ரூவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்தை நீடிப்பதாகவும் எல்லைப் படை ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் லிஸ் ட்ரஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதி வரை 14,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள், சிறிய படகுகளை பயன்படுத்தி, ஆங்கில கால்வாயை கடந்து பிரித்தானியாவிற்குள் பிரவேசித்துள்ளனர்.
இவ்வாறான குறுக்குவழிகளைத் தடுக்கும் முயற்சியாக, கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கருதப்படும் சில புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவில் அடைக்கலம் கோருவதற்காக அனுப்புவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது.
எனினும் தொடர்ச்சியான சட்ட சவால்களைத் தொடர்ந்து கிழக்கு-ஆபிரிக்க நாட்டிற்கு இதுவரை புகலிடக் கோரிக்கையாளர்கள் யாரும் இதுவரை அனுப்பப்படவில்லை.
இந்த நிலையில் நீதிமன்ற விசாரணையில் ரூவாண்டாவிற்கு புகலிடம் கோருவதற்காக அனுப்பும் திட்டம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டால், பிரித்தானியா ருவாண்டாவுக்கு செலுத்திய 120 மில்லியன் பவுண்ஸ் நிதியை இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
