விமான நிலையங்களில் வருகிறது தனிப்பிரிவு - வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை தேடுவோருக்கு முக்கிய அறிவித்தல்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையின் கீழ் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குடிவரவு - குடியகல்வு திணைக்களம் மற்றும் விமான நிலையம் ஆகியன ரகசிய காவல்துறையினருடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு
“இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை தேடி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமலும் வேலை வாய்ப்புக்கான சட்ட ரீதியான அனுமதி பத்திரம் இல்லாமலும் சட்டவிரோதமாக நாட்டை விட்டு பலர் வெளியேறி வருகின்றனர்.
இலங்கையிலிருந்து சுற்றுலா நுழைவு விசைவின் மூலம் பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை வாய்ப்பை தேடுகின்றனர். சுற்றுலா நுழைவுவிசைவு மூலம் பயணத்தை மேற்கொள்வோருக்கு குறித்த நாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறுமாயின் அதில் எந்த தவறும் இல்லை.
எனினும், துரதிஷ்டவசமாக இவ்வாறு வெளிநாடு செல்வோரில் பலர் வழி தவறி சென்று பாதாளக் குழுக்களிடம் மாட்டிக் கொள்கின்றனர்.
குறிப்பாக பெண்கள் தேவையற்ற தொழில்களில் சிக்கி தமது வாழ்வை இழக்கும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன. இலங்கைக்கு இது ஒரு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
குறித்த செயற்பாட்டை தடுக்கும் முகமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குடிவரவு - குடியகல்வு திணைக்களம் மற்றும் விமான நிலையம் ஆகியன சட்ட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
முறைப்பாடளிக்க விமான நிலையங்களில் தனிப் பிரிவு
வெளிநாடுகளில் வேலை செய்வோர் இலங்கைக்கு வரும் போதும் இலங்கையில் இருந்து திரும்பி போகும் போதும் அவர்களுக்கென்று சிறப்பு வசதிகளை வழங்குவதற்காக செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் விமான நிலையங்களில் தனிப் பிரிவொன்று அறிமுகப்படுத்தப்படும்.
வெளிநாடு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி மக்களை ஏமாற்றும் போலி முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அவ்வாறான போலி முகவர்கள் யாரையேனும் தெரிந்தால் உடனே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் முறையிடுங்கள்” என்றார்.