ஐ.எம்.எப் உடனான உடன்படிக்கையில் மக்களுக்கு பாதகமான திட்டங்கள்! நாடாளுமன்றில் சமர்ப்பிக்க மறுக்கும் மத்திய வங்கி
சர்வதேச நாணய நிதியத்துடன் சிறிலங்கா அரசாங்கம் செய்துகொண்ட உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் படி கோரி எதிர்க்கட்சிகள் அழுத்தங்களை வழங்கி வருகின்றன.
இருப்பினும், குறித்த இந்த உடன்படிக்கையின் பிரதி இப்போதைக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படக்கூடிய சாத்தியங்களை மத்திய வங்கி மறுத்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை
சிறிலங்கா அரசுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் அண்மையில் பணியாளர் மட்ட உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த உடன்படிக்கையில் மக்களுக்கு பாதகமான திட்டங்கள் இருப்பதாக சந்தேகிக்கும் எதிர்க்கட்சிகள் அதனை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும் படி கோரிவருகின்றன.
வெளிப்படுத்தும் நடைமுறை இதுவரை பின்பற்றப்படவில்லை
இருப்பினும், சர்வதேச நாணய நிதியதிட்டங்களை நாடாளுமன்றத்திற்கு வெளிப்படுத்தும் நடைமுறை இதுவரை பின்பற்றப்படவில்லையென்பதால் இப்போது இதனை செய்யமுடியாதென மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் இதுவரை அமைச்சரவைக்கு கூட சமர்ப்பிக்கப்படாத நிலையில் அதனை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பது முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் நாணய சந்தை குறித்த முக்கியமான தகவல்கள் இந்த உடன்படிக்கையில் இருப்பதால் வெளிப்படைத்தன்மை தேவையென்றாலும் இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியாதநிலை இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
