எவரும் விளையாட முடியாது - ரணில் கறார் செய்தி
நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இவ்வாறு வீழ்ச்சியடைந்த நாட்டிற்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தை தவிர உலகில் வேறு எந்த நிறுவனமும் இல்லை எனத் தெரிவித்த அதிபர், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகள் இருப்பின், அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கண்டி அதிபர் மாளிகையில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற கண்டி மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் சட்டத்தரணிகளுடனான சந்திப்பின் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவரும் விளையாட முடியாது
சில அரசியல் கட்சிகள் இதற்கான முன்மொழிவுகளை முன்வைக்காமல் மக்களிடம் பொய் சொல்லி அரசியல் நாடகம் ஆடுவதாக தெரிவித்த அதிபர், நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துடன் எவரும் விளையாட முடியாது எனவும் வலியுறுத்தினார்.
இந்தச் சவால்கள் தொடர்பில் தெரியாமல் தான் அதிபர் பொறுப்பை ஏற்கவில்லை எனவும், தடைகள் வந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனவும் அதிபர் வலியுறுத்தினார்.
