உடன்படிக்கைக்கு தவறின் நீங்களே முழு பொறுப்பு..! பகிரங்கமாக அறிவித்தார் ரணில்
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளோ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டால் நெருக்கடிக்கு அவர்களே தீர்வுகளை வழங்கவேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தினை தெரிவித்தார்.
எதிர்காலம் கடுமையானதாக இருக்கும்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
அது நல்லதா கெட்டதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும், முதலில் ஊழியர்கள் மட்டத்தில் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும்.
அதுமட்டுமன்றி எதிர்காலம் கண்டிப்பாக கடினமானதாக இருக்கலாம், நான் அதை மறுக்கவில்லை.
பழைய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவையே இன்று நாம் அனுபவிக்கின்றோம்
முதல் 6 மாதங்கள் மிகவும் கடினமானது, இது நாம் அனுபவித்திராத நேரம், ஆனால் நாம் அதைக் கடந்து செல்ல வேண்டும்.
இதிலிருந்து நாங்கள் திரும்பிச் செல்ல முடியாது எனவும், பழைய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகளையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.