இலங்கைக்கு முதல் தவணைப் பணம் வழங்கல் தொடர்பில் ஐ.எம்.எஃப் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதற்கமைய சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனில் முதல் தவணை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கப் பெறும் என நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி மசாஹிரோ நொசாகி லண்டனில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
ஓரிரு நாட்களில் முதல் தவணை
சந்தையில் இருந்து 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்வதன் மூலம் நாட்டின் கையிருப்பை அதிகரிக்க மத்திய வங்கி உதவும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமது கொடுப்பனவை ரூபாவாக மாற்றலாம் என்றும், அரசாங்கக் கடன்கள் மற்றும் பிற செலவினங்களைத் திருப்பிச் செலுத்த அந்த நிதியைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இறக்குமதியை கட்டுப்படுத்தும் முறைமை நீக்கப்பட வேண்டும் எனவும், முற்போக்கான முறையில் வரி வசூலிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் தலையீடு இல்லை
இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளில் தலையிட மாட்டோம் எனவும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. மேலும் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் பரிந்துரை செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் மசாஹிரோ நொசாகி இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியம் வழங்கும் உதவித் தொகை மூலம் இலங்கை பெற்றுக் கொண்ட கடன்கள் மற்றும் நிலுவையில் உள்ள கடன்களைத் செலுத்துவதற்கு 4 முதல் 10 ஆண்டுகள் வரை கால அவகாசம் இலங்கைக்கு கிடைக்க பெறும் எனவும் நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
