சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு கைநழுவும் சாத்தியம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ள போதிலும் இதுவரை எந்தவொரு முடிவுகளும் அறிவிக்கப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களுக்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்காவும் இந்தியாவும் ஏற்கனவே கூறியிருந்த போதிலும், பொருளாதார மீட்பிற்கான கடன்பெறும் பேச்சுக்களில் சாதகத்தன்மையை ஏற்படுத்துமா என்பது இதுவரை தெரியவராத நிலைமை நீடிக்கும் நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தீவிரமான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா சார்ந்த சர்வதேச நாணய நிதியத்துடான பேச்சுக்களின் சாதகத்தன்மையில் கேள்விக்குறி
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதுடன், 30 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து பல்வேறு கட்ட சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளது.
இலங்கையிலிருந்து, ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்ட நிலையில் அரச தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரையும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
எனினும் சர்வதேச நாண நிதியம் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்த இதுவரை எந்தவொரு அறிவிப்புக்களையும் வெளியிடாத நிலையில், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான நிதியை திரட்ட முடியாத நிலைமையை நோக்கி இலங்கை நகர்ந்து வருகின்றது.
அமெரிக்காவின் தடைகளை எதிர்நோக்கியுள்ள ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கோரல்
இது நாட்டின் நெருக்கடி நிலைமையை பாரதூரமான நிலைக்கு இட்டுச் செல்லும் என்ற சூழலில் அமெரிக்காவின் தடைகளை எதிர்நோக்கியுள்ள ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளமையானது, அமெரிக்கா சார்ந்த சர்வதேச நாணய நிதியத்துடான பேச்சுக்களின் சாதகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான கலாநிதி சமன் வீரசிங்க ஆகியோர் ரஷ்யாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் இன்று கட்டாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வாய்ப்பு குறித்து கலந்துரையாடும் நோக்கில் அவர்களது விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
