உடனடி செயலில் இறங்க இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட அனைவரையும் பொறுப்புக் கூறச் செய்தல்
இலங்கை மக்களுக்கு நீண்ட கால தீர்வைக் காண விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
போராட்டம் தொடர்பான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட அனைவரையும் பொறுப்புக் கூறச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலகத் தயாராகி வரும் நிலையில், தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புடன் தற்போது உருவாக்கப்பட்டுள்ள தருணத்தை அணுகுமாறு இலங்கை நாடாளுமன்றத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
நீடித்த தீர்வுகளை கண்டறிதல்
நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மோசமான பொருளாதார நிலைமைகள் தொடர்பாக இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்கும் தீர்வுகளை கண்டறிய வேண்டும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்காக புதிய, அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் விரைவாக செயற்படுமாறு தாங்கள் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுக்கு அமைதியான முறையில் குரல் எழுப்ப உரிமை உண்டு.
எனினும் போராட்டம் தொடர்பான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட அனைவரையும் முழுமையாக விசாரணை செய்யவும், கைது செய்யவும் மற்றும் வழக்குத் தொடரவும் தாம் அழைப்பு விடுப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.