இந்தியா தொடர்ந்தும் இலங்கையை கண்காணிக்க வேண்டும் - சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கோரிக்கை
இந்தியப் பிரதமரினால் சிறிலங்கா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளையும் இலங்கையின் மீதான இந்தியாவின் எதிர்பார்ப்பினையும் நம்பிக்கையையும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வரவேற்றுள்ள அதேவேளை தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் தரப்பாக இல்லாமல், ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தரப்பு என்ற அடிப்படையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.
மேற்படி விடயங்கள் தொடர்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு:
ரணிலின் இந்தியப் பயணம்
'' ரணில் விக்ரமசிங்க அதிபராகி ஒரு வருடத்திற்குப் பின்னர் கடந்த 20.07.2023 அன்று முதல்முறையாக இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திரமோடியின் அழைப்பின்பேரில் டெல்லி சென்றிருந்தார். டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன.
ரணில் விக்ரமசிங்க அவர்கள் டெல்லி செல்வதற்கு முன்பாக, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சார்ந்த ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ்த்தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை டெல்லிக்கு அனுப்பியிருந்தனர்.
அதில் முக்கியமாக பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுமாறும், இந்தியாவின் பாதுகாப்பு என்பது இலங்கை தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தியுடன் பின்னிப்பிணைந்தது என்பதையும் வலியுறுத்தியிருந்தனர்.
ஆகவே இந்திய அரசாங்கம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு தரப்பு என்ற அடிப்படையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கு முழுமையான தார்மீக உரிமை இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இரு நாடுகளின் பாதுகாப்பு
எமது கடிதத்தில் தெரிவித்திருந்ததைப் போன்றே இந்தியப் பிரதமர் மோடி அவர்களும் சிறிலங்கா அதிபருக்கு மேற்கண்ட விடயங்களைத் தெளிவாக எடுத்துரைத்திருந்தது மாத்திரமல்லாமல், இலங்கைத் தமிழ் மக்கள் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு அவர்களது அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்படவேண்டும் என்றும் அதற்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாணசபை தேர்தல்களை நடாத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதுடன் அதனை சிறிலங்கா அரசு செய்யும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையின் பாதுகாப்பு என்பவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது என்றும் இந்துமகா சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கும் அது முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்கு இந்திய அரசு தொடர்ந்தும் உறுதுணையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் அபிவிருத்தி மற்றும் அதற்கான உதவிகள் என்பவைகூட, இலங்கை தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் இந்தியப் பாதுகாப்புடன் ஒருமித்துப் போகின்ற ஒரு விடயம் என்பதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கருதுவதைப் போன்றே இந்தியப் பிரதமரும் கருதியிருப்பதையிட்டு நாம் எமது வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் இந்தியப் பிரதமருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
13ஆவது திருத்தம்
இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 36 வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலையிலும் அதில் அடங்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலையிலேயே இந்தியா இருக்கிறது என்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக டெல்லியில் ஒப்புக்கொண்டாலும் மாறிமாறி ஆட்சி செய்யும் சிறிலங்கா அரசாங்கங்கள் அதனை இழுத்தடித்து வருவதையே நாங்கள் பல காலமாகப் பார்த்து வருகிறோம்.
பல்வேறு காரணங்களைக் கூறி அதை நடைமுறைப்படுத்துவதிலிருந்து தப்பித்து வருவதையும் பார்த்திருக்கின்றோம். இந்த முறையும் அவ்வாறில்லாமல், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு இந்தியா ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன், குறிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம்.
மலையக தமிழ் மக்கள்
மலையக தமிழ் மக்கள் இந்த மண்ணில் குடியேறி 200 வருடங்கள் முடிவடையும் இன்றைய காலகட்டத்தில் சரியான ஊதியமில்லாமல், வாழ்விடங்களில்லாமல் இன்னமும் லயன்களில் அடிமைகளாக வாழ்கின்ற சூழ்நிலையில் அவர்களுடைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 75 கோடி ரூபாய்களை வழங்குவது வரவேற்பிற்குரியதும் பாராட்டுக்குரியதுமாகும்.
மலையக மக்கள் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உதவிகளையும் ஒத்தாசைகளையும் இந்தியா தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
சிறிலங்கா அதிபரும் தமிழ் மக்களுக்கும் இந்திய அரசுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை காலம் கடத்தாது முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கிறோம்.'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.