மருந்துகளுக்கு நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புதிய நடவடிக்கை
இரண்டு மாதங்களுக்குள் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (26) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர கொள்வனவின் கீழ் 160 வகை மருந்துகளைக் நாட்டிற்கு வரவழைப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பொதுவாக ஆறு மாத காலம் எடுப்பதனால் இந்த அவசர கொள்வனவை நடைமுறைப்படுத்தியதாக இதன் போது அவர் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் தற்போது நிலவுகின்ற தட்டுப்பாட்டை இரண்டு மாதங்களுக்கு நிவர்த்தி செய்யக்கூடியதாகக் காணப்படும் எனவும் வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியே காரணம்
தற்போதைய மருந்து தட்டுப்பாட்டுக்கு இன்றைய பொருளாதார நெருக்கடியை பிரதான காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மருந்துகளை இறக்குமதி செய்வதிலும் இந்த பொருளாதார நிலை செல்வாக்குச் செலுத்துவதாக கூறிய அவர் அதற்கு இணங்க புற்று நோய்க்கு அவசியமான 65 மருந்துகள் தற்போது முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுவரையில் 350 வகை மருந்துகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களினால் சுகாதார அமைச்சிற்கு பெற்றுத்தரபட்டதாகவும், இவ்வருட இறுதிக்குள் இந்த எண்ணிக்கை சுமார் 100 வகை மருந்துகள் என்ற எண்ணிக்கையினை அடையும் எனவும் அவர் கூறினார்.
80 அல்லது 100 அளவில் தரமற்ற (Quality failure) மருந்துகள் ஒவ்வொரு வருடமும் சிறிலங்காவில் இனங்காணப்படுகிறது இது சிறிலங்காவில் மாத்திரமல்லாமல் ஏனைய நாடுளிலும் இவ்வாறான நிலை காணப்படுவது வழக்கமாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.