தரமற்ற அரிசி இறக்குமதிக்கு தயாராகும் அரசாங்கம் : ரஞ்சித் மத்தும பண்டார குற்றச்சாட்டு
தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தது போன்று தரமற்ற அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,
சீனி வரி
“சீனி வரி குறைக்கப்பட்டு சீனி இறக்குமதி செய்யப்பட்டதைப் போன்று அரசாங்கத்தின் நட்பு வட்டார நண்பர் கைக்கூலிகளுக்கு சலுகைகளை வழங்குவதற்காக அரிசிக்கு அறவிடப்படும் 68 ரூபா வரியை ஒரு ரூபாவாகக் குறைத்து அரிசியை இறக்குமதி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக நாட்டின் தேசிய நெற்செய்கையாளர் மிகவும் அநாதரவான நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
கடந்த நான்கு பருவங்களாக விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கவில்லை.கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சேதன உரக் கொள்கையால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர்.
இதற்கிடையில், தற்போதைய அரசாங்கம் நெற்பயிர்ச் செய்கையில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளுக்கு 18.5 வீத பெறுமதி சேர் வரியினை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை,பல இலட்சம் தொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நெல் விளைச்சல் நன்றாக இருக்கும் இந்நேரத்திலயே, வெளிநாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் இந்த பருவத்தில் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அரிசி இறக்குமதியால், அரசாங்கத்திற்கு உதவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் கோடீஸ்வரர்களாக மாறுகின்றனர்.
உரங்களுக்கு அரசாங்கம் வரி விதிக்கும் அதே வேளையில் அரிசி வரியை குறைத்து வருகிறது. தேசிய விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் பொருட்டே இதுவரை அரிசிக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது.
சேதன உரக் கொள்கை
சோளத்துக்கு விதிக்கப்பட்ட வரியையும் அரசாங்கம் குறைத்துள்ளது. மொனராகலை, அனுராதபுரம் மாவட்டங்களில் இருந்து சோள அறுவடை கிடைத்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து 2 இலட்சம் தொன் சோளத்தை இறக்குமதி நட்பு வட்டார நண்பர்களுக்கு செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டின் விவசாயத்தை அழிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. கோட்டாபாயவும் ஏனைய முட்டாள் ஆட்சியாளர்களும் சேதன உரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் ஒரு ஏக்கரில் இருந்து 120 பூசல் நெல் பெற்று வந்தனர்.
சேதன உரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு,ஒரு ஏக்கருக்கு அறுவடை செய்யப்பட்ட நெல் 50 பூசல்களாகக் குறைந்தது.இந்த முட்டாள்தனமான கொள்கைகளால் விவசாயி ஆதரவற்றுப் போயுள்ளனர்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |