சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
பல ஐரோப்பிய தயாரிப்புகள் தனது சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குமாறு சிறிலங்காவை ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சிறிலங்கா அரசாங்கம் ஆகியவற்றின் கூட்டு ஆணைக்குழுவின் 24ஆவது கூட்டம் நேற்றைய தினம் பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்றது.
நட்பு மற்றும் திறந்த சூழ்நிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இருதரப்பு உறவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டதுடன், இருதரப்பு நலன்கள் - ஆளுகை, நல்லிணக்கம், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் மற்றும் புதுப்பிப்புகள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக இரு தரப்பும் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, உலகளாவிய தொற்றுநோயின் தாக்கத்தின் விளைவாக அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக, ஒரு இடைக்கால நடவடிக்கையாக, அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக சிறிலங்கா தெளிவுபடுத்தியுள்ளது.
2023 இல் கொழும்பில் அடுத்த கூட்டு ஆணைக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் சிறிலங்காவும் ஒப்புக்கொண்டன.
ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பாம்பலோனி மற்றும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கினர்.
