ராஜபக்சர்களின் மீளெழுச்சி : நாட்டு மக்களுக்கு மஹிந்த வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை நாளை (15) வெளியிடுவார் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் இன்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ராஜபக்சர்களின் மீளெழுச்சி
“முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அரசியல் ரீதியில் தோற்றுவித்த நெருக்கடிகளினால் பாரிய விளைவுகளை எதிர்கொண்டோம்.
அரசியலமைப்பின் ஊடாக தீர்வு கண்டுள்ளோம். கோட்டாபய ராஜபக்ச இல்லை என்பதற்காக நாங்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்பதொன்றும் கட்டாயமல்ல.
பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு நாளைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது. ராஜபக்சர்களின் மீளெழுச்சியைக் கண்டு எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் வெறுக்கத்தக்க வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மீது நாட்டு மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
அவரது தலைமைத்துவத்திலான அரசாங்கத்தை கோருகிறார்கள். நாளைய தேசிய மாநாட்டில் அவர் முக்கிய செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்குவார்.
வற் வரி
அரகலய என்று குறிப்பிட்டுக் கொண்டு தோற்றம் பெற்ற போராட்டத்தை அடக்குவதில் கோட்டாபய ராஜபக்ச தோல்வியடைந்தார்.
அதனால் தான் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றன. அதிபர் ரணில் விக்ரமசிங்க போராட்டத்தை சிறந்த முறையில் அடக்கினார்.
நாட்டு மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும்.
அதிபரின் வரி விதிப்பு கொள்கைக்கு துணை போக கூடாது என்பதற்காக வற் வரி மீதான வாக்கெடுப்பில் நான் கலந்துக் கொள்ளவில்லை.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |