உயிர்த்தஞாயிறு தாக்குதல் - பாப்பரசருக்கு பறந்த அம்பலத்துக்கு வராத முக்கிய விடயங்கள்
இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாதத் தாக்குதல் குறித்து இதுவரை அம்பலப்படுத்தப்படாத சில முக்கிய விடயங்கள் பற்றிய கடிதமொன்று பாப்பரசருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகையினால் இந்தக் கடிதம் பாப்பரசருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக ஆயர் இல்ல வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி 8 இடங்களில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 250ற்கும் அதிகமானோர் பலியானதோடு, 500ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
இன்னும் பலர் அங்கவீனர்களாகவும், நோயாளர் கட்டில்களிலும் இருந்து வருகின்றனர். இந்தக் கொடூரத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், குற்றவாளிகளைத் தண்டிக்கும்படியும் பல தடவை போராட்டங்களும் ஊடகவியலாளர் சந்திப்புக்களையும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாதத் தாக்குதல் குறித்து இதுவரை அம்பலப்படுத்தப்படாத சில முக்கிய விடயங்கள் பற்றிய கடிதமொன்றை கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை பாப்பரசர் பிரான்சிஸிற்கு அனுப்பிவைத்திருப்பதாக கொழும்பு ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சோனிக் சோனிக் என்கிற புனை பெயரைப் பயன்படுத்தியோர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தினத்தன்று தாக்குதல்தாரி ஒருவருக்கு வந்த ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரது தொலைபேசி அழைப்பு, பற்றிய முக்கிய விடயங்கள் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக மேலும் கூறப்படுகின்றது.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகத்திற்கு முன்பாக உதவிகோருவதாகவும் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் மந்தகதியில் நடத்தப்படுவதாகவும், நீதியை விரைவில் பெற்றுத்தர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்ற 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் கறுப்புக் கொடிப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.