களங்கத்தை துடையுங்கள் -கோட்டாபயவிற்கு சென்ற முக்கிய கடிதம்
பண்டோரா ஆவணத்தில் தனது பெயரும், தனது மனைவியின் பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து சுயாதீன விசாரணையொன்றை நடத்துமாறு பிரபல தொழிலதிபரும், முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவருமான திருக்குமார் நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த விபரங்கள் அடங்கிய பண்டோரா ஆவணத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஸ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயர்கள் வெளியான நிலையில் அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு திருக்குமார் நடேசன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், பண்டோரா ஆவணத்தில் தமது நாட்டு பிரஜைகளின் பெயர்கள் அடங்கியிருப்பின் அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு பகிரங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவ்வாறான சூழலில் நானும் எனது மனைவியும் எந்தவித தவறும் இழைவிக்கவில்லையென முற்றுமுழுதாக மறுக்கின்றோம். இதனால் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் சுயாதீன விசாரணையொன்றை துரிதமாக நடத்தி தம்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான களங்கத்தை போக்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் நானும் எனது மனைவியும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய விசாரணைகள் மூலம் நாங்கள் குற்றவாளிகள் அல்ல என்பது தெளிவுபடுத்தப்படும் என திருக்குமார் நடேசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பண்டோரா ஆவணத்தில் இலங்கை தொடர்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிருபமா ராஜபக்ஸ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரிடம் காணப்படும் சொத்துக்கள் மற்றும் அவைகளை எவ்வாறு பெற்றுக் கொண்டனர் என நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தல் வேண்டும் என ஸ்ரீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். அவர்கள் நிதி வைப்புச் செய்துள்ள நாடுகள் எவை என்பதையும் தெரியப்படுத்தல் வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 16 மணி நேரம் முன்