கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வெளியான அறிவிப்பு
கொழும்பு (Colombo) அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
மேலும், இது தவிர தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை 1,070 உறுதிப் பத்திரங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள்
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 50,000 கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க ( (Ranil Wickremesinghe) தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட 22 குடியிருப்பு வீடுகளில் 14,559 வீடுகள் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக, மிஹிந்து சென்புர, சிறிசர உயன, மெத்சர உயன, லக்முத்து செவன, சிறிமுத்து உயன ஆகிய திட்டங்களை மையப்படுத்தி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.
வீட்டு உரிமைப் பத்திரங்கள்
இதற்கு மேலதிகமாக லக்ஸந்த செவன, ரந்திய உயன, லக்முத்து உயன, முவதொர உயன, சியசத செவன, புரதொர செவன, ஜயமக செவன, மிஹிஜய செவன, ஹெலமுத்து செவன, சியபத செவன, லக்சேத செவன, லக்கிரு செவன ஆகிய வீட்டுத் திட்டங்களுக்கு முன் உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட இந்த ஆண்டு இறுதியில் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான உரிமைப் பத்திரங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முதலில் வழங்கவுள்ளது.
சில விதிகள் மற்றும் விதிமுறைகளின் சிக்கலான சூழ்நிலையால் இந்த வீடுகளின் உரிமை தாமதமானது எனவும், ஏற்கனவே சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தேவையான ஆலோசனைகளை பெற்றுள்ளதாவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |