பரீட்சைக் கடமைகளில் இனரீதியான பாகுபாடு - பரீட்சை ஆணையாளருக்கு சென்றது கடிதம்
திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை வழங்கப்பட்ட 5ஆம் தர மற்றும் உயர்தரப் பரீட்சைக் கடமைகளில் இனரீதியான பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் (Imran Maharoof) பரீட்சை ஆணையாளர் நாயகத்துக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
பரீட்சை ஆணையாளர் நாயகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
திருகோணமலை மாவட்டத்தில் 5ஆம் தர மற்றும் உயர்தரப் பரீட்சைக்கடமைக்காக இம்முறை வழங்கப்பட்டுள்ள நியமனங்களில் வழமைக்கு மாறாக இனரீதியாக புறக்கணிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அதிபர், ஆசிரியர்கள் என்னிடம் புகார் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் பின்வரும் விடயங்கள் தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். எனவே, தயவு செய்து இது விடயங்களில் உடன் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
1. இந்த பரீட்சைக் கடமை நியமனங்களில் வழமையாகப் பின்பற்றப்பட்டு வந்த இனச்சமநிலை பின்பற்றப்பட வில்லை. முஸ்லிம் அதிபர், ஆசிரியர்கள் இம்முறை பரீட்சைக் கடமைகளில் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
2. பரீட்சைக் கடமை வழங்கப்பட்ட கிண்ணியா, மூதூர், தோப்பூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் புல்மோட்டை, கோமரங்கடவெல போன்ற 80 கி.மீற்றருக்கும் அதிக தூரப் பிரதேசங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அயல் பிரதேசமான திருகோணமலை, குச்சவெளி போன்ற பிரதேசத்தவர்களே வழமையாக இப்பகுதி பரீட்சைக் கடமைக்கு நியமிக்கப்பட்டனர். இம்முறை சிரமப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிலை திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
3. வழமையாக வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் வழங்கப்படும் பெயர் பட்டியல்களிலிருந்தே பரீட்சைக் கடமை நியமனங்கள் செய்யப்பட்டன. இவ்வாறு செய்தவதனூடாக சிரேஸ்டத்துவம், தகைமை என்பன கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும். இம்முறை இந்த நிலை பின்பற்றப்படவில்லை. வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பெயர் பட்டியலுக்கு வெளியே விருப்பு வெறுப்புக்கேற்ப நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
4. அதிபர், ஆசிரியர்களின் சிரேஸ்டத்துவம் கவனத்தில் கொள்ளப்படாமல் முதலாந்தர அதிபர் ஆசிரியர்கள் உதவி மேற்பார்வையாளர்களாக இம்முறை நியமிக்கப்பட்டுள்ளனர். வழங்கப்பட்ட நிமயனக் கடிதங்களில் கூட பெயர், தரம், பாடசாலை என்பன சரியாகக் குறிப்பிடப்படாது பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
5. மேற்பார்வை விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டோரிடமிருந்து ஒப்பம் பெறப்பட்ட போது பரீட்சை நிலையமோ மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர் கடமைகளோ குறிப்பிடப்படாது ஒப்பங்கள் பெறப்பட்டதாகவும் பின்னர் விருப்பத்திற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
6. பரீட்சைக் கடமை தொடர்பாக தெளிவு படுத்தும் கூட்டம் பகல் 12வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் மாலை 5 வரை அது நடத்தப்பட்டுள்ளது. கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு கூட வழங்கப்படவில்லை. இக்கூட்டத்தில் வைத்தும் நியமனங்களில் விருப்பு வெறுப்புகள் காட்டப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டதாக கலந்து கொண்டோர் புகார் தெரிவிக்கின்றனர்.
நேர்மையாக நடக்கவேண்டிய பரீட்சைக் கடமைகளில் இவ்வாறான இனரீதியான புறக்கணிப்புகளும் விருப்பு வெறுப்புகளும் இடம்பெற்றால் பரீட்சைத் திணைக்களத்தின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகிவிடும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு தயவுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதோடு எதிர்காலத்தில் நடுநிலையாகச் செயற்படுவோரை பரீட்சை பிராந்திய இணைப்பாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். என்று அந்தக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை விட சொந்த பிரதேசம் தவிர்ந்த அடுத்த பிரதேசத்ததைச் சேர்ந்தவர்களே பரீட்சைக் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை சண்முகா பாடசாலை பரீட்சைக் கடமைகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு திருகோணமலையைச் சேர்ந்தவர்களையே அங்கு பரீட்சைக் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதால் சந்தேக நிலை ஏற்பட்டுள்ளதாக திருகோணமலையிலிருந்து எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே இந்த விடயத்தையும் கவனத்தில் கொள்ளுமாறும் அவர் பரீட்சை ஆணையாளரிடம் அவர் மேலும் கேட்டுள்ளார்.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்