அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 30,000 பேர் : ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
இலங்கையின் அரச சேவையில் புதிதாக 30,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மன்னாரில் (Mannar) இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”5 முதல் 6 வருடங்களுக்கு பின்னர் தற்போது 30,000 பேரை அரச சேவையில் சேர்க்கவுள்ளோம்.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை.
பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவோம், விண்ணப்பங்களை அனுப்புங்கள் அதன்படி பரீட்சைக்கு தோற்றி அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு நாங்கள் தொழிலை வழங்குவோம்.
விசேடமாக அரச சேவையில் தமிழ் பேசுபவர்களின் பற்றாக்குறை உள்ளது. காவல் நிலையங்களிலும் இந்தப் பிரச்சினை காணப்படுகின்றது.
எனவே, 2,000 புதிய காவல்துறையினர் பணியமர்த்தப்படுவார்கள், தமிழ் தெரிந்த உங்கள் பிள்ளைகளை காவல்துறை பணியில் இணைய செய்யுங்கள்.
இது ஒரு மரியாதைக்குரிய வேலையாகும். நம் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வேலை. மேலும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் பேசத் தெரிந்தவர்கள் அரச பணியில் சேர வேண்டும். ஒன்றாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். எங்களுடைய நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்.“ என தெரிவித்தார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
