தாய் விலங்குகள் இன்மை; கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருள் தட்டுப்பாடு காரணமாக நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில் கோழி இறைச்சிக்கான தட்டுப்பாடு காரணமாக, கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனை அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.
கோழி இறைச்சியின் விலை

கோழிப் வளர்ப்பிற்கு தேவையான தாய் விலங்குகள் இல்லாத காரணத்தினால் முட்டைத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, தற்போது கோழி இறைச்சிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.
இதனால், முன்னர் 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை தற்போது 1,150 முதல் 1,200 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தாய் விலங்குகள் இன்மையால் கோழிக்குஞ்சு ஒன்றின் விலையும் 500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மூடப்பட்ட கோழிப்பண்ணைகள்

இந்த விலை அதிகரிப்புக்கள் காரணமாக 90% சிறிய மற்றும் நடுத்தர கோழிப்பண்ணைகள் மூடவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் உள்ள முட்டைத் தேவையை பெரிய அளவிலான கோழிப்பண்ணையாளர்களே வழங்குகின்றனர், இருப்பினும் அவர்களால் நாட்டின் முழு முட்டைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது.
நாட்டில் உள்ள முட்டைத் தேவையில் 40 வீதத்தினை சிறிய மற்றும் நடுத்தர கோழிப்பண்ணைகளே வழங்குகின்றன, ஆனால் தற்போது 10 வீதம் மட்டுமே வழங்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் உள்ள கோழி இறைச்சி தேவையில் 30 வீதத்தை சிறிய மற்றும் நடுத்தர கோழிப்பண்ணைகளே வழங்குகின்றன, ஆனால் தற்போது அதில் 20 வீதமே வழங்கப்படுகின்றது.
கேக் விலை அதிகரிப்பு

முட்டைத் தட்டுப்பாட்டால் பண்டிகைக் காலங்களில் கேக் இன் விலையும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதுவரை முட்டைக்கான நிர்ணயவிலை தீர்மானிக்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.