வடக்கில் அதிகரிக்கும் நிதி மோசடி : காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி, ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் (Jaffna), மானிப்பாய் (Manipay), கிளிநொச்சி (Kilinochchi) உள்ளிட்ட காவல்நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
காவல்துறை விசாரணை
வெளிநாடு செல்வதற்கு வங்கி கணக்கில் பெருந்தொகை பணம் வங்கி கணக்கில் இருப்பில் இருக்க வேண்டும் என கூறி , வங்கி கணக்கு இலக்கங்களை பெற்று , அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று , வங்கியில் உள்ள பணத்தினை மோசடியாக கும்பல் பெற்றுக்கொண்டு தலைமறைவாகி வருகிறது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடு செல்ல காத்திருக்கும் இளையோர் , வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முகவர்கள் ஊடாக பயண ஏற்பாடுகளை செய்து சட்ட ரீதியான முறையில் செல்ல வேண்டும்.
இது தொடர்பில் இளையோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இவ்வாறான மோசடி சம்பவங்களில் இருந்து அவர்கள் தப்பிக்கொள்ள முடியும். இல்லையெனில் பெருந்தொகை பணத்தினை இழக்க நேரிடும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)