மேலும் வீழ்ச்சியடையும் அபாயத்தில் இலங்கை; கை கொடுக்குமா சர்வதேச நாணய நிதியம்!
இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இலங்கையின் பொருளாதார மந்த நிலைக்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
குறித்த இரண்டு காரணங்களால் இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மோசமான நிலைக்கு செல்லக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான காரணங்கள்
இறுக்கமான நாணயக் கொள்கை மற்றும் ஆசியாவின் வேகமான பணவீக்கம் போன்றவை, இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்த இரு பிரதான காரணங்களாகும்.
இதன் விளைவாக, இலங்கையின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையலாம் என அமெரிக்க செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ப்ளூம்பெர்க் தெரிவித்தபடி, இலங்கையின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடந்த வருடத்தை விட இந்த வருடம் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வருடம் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 10 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
பொருளாதார மந்தநிலை தொடரும்
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகள் மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றியளித்து, கடன் வசதிகள் கிடைத்தால் இந்த நிலை மாறலாம் அல்லது குறித்த மந்தநிலை தொடரும் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச கடன் வழங்குநர்களுடன் இலங்கை தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே இலங்கையின் விலையுயர்வு 69.8 வீதமாக காணப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மந்தநிலை இதே போல தொடருமாக இருந்தால், மேலும் விலையுயர்வுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க செய்தி நிறுவனமான ப்ளூம்பேர்க் குறிப்பிட்டுள்ளது.