இலங்கையில் தீவிரமடையும் டெங்கு அபாயம்
நாட்டின் 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவால் இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 43ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாளொன்றுக்கு 328க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்படுவதாக டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பாதிப்படையும் சிறுவர்கள்
மேலும், நாடுமுழுவதும் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதமானோர் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலைகளில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் நளின் ஆரியரத்தன தெரிவித்துள்ளார்.
பாதிப்பு
கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கண்டி குருநாகலை மற்றும் புத்தளம் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலிலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கம்பஹாவில் 9ஆயிரத்து 638பேரும், கொழும்பில் 9ஆயிரத்து 257 பேரும், களுத்துறையில் 2ஆயிரத்து 759 பேரும், கண்டியில் 2ஆயிரத்து 478 பேரும், குருநாகலையில் ஆயிரத்து 555 பேரும், புத்தளத்தில் இரண்டாயிரத்து 634 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 9 ஆயிரத்து 638 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்த நிலையில் இம்மாத ஆரம்ப 10 நாட்களுக்குள் 3 ஆயிரத்து 557 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகரிப்பதற்கான காரணம்
மேலும் டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவிக்கையில், “இம்மாத இறுதிக்குள் மேற்குறித்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
தற்போது நாட்டில் மழையுடனான காலநிலை நிலவுவதால் நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளது.
ஆகவே, நீர் தேங்கியிருக்கும் மற்றும் நுளம்புகள் பெருக்கத்து ஏதுவாக இருக்கும் இடங்களை கண்டறித்து அவற்றை இல்லாதொழிப்பதன் மூலம் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.” எனத் தெரிவித்தது.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்