டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இந்தியா சென்ற அன்ரனி பிளிங்கன்!
டெல்லியில் நடைபெறவுள்ள 5 ஆவது இந்தியா - அமெரிக்கா 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் இந்தியாவை சென்றுள்ளார்.
இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று(10) நடைபெற உள்ளது.
அதில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் நேற்றிரவு(9) டெல்லியை சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
2+2 பேச்சுவார்த்தை
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்தியா அமெரிக்கா இடையே 2+2 பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளையும் சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பார்கள்.
இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக ஏற்கெனவே அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் இந்தியாவை சென்றடைந்திருந்தார்.
அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை முறையே சந்தித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தவுள்ளனர்.
இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு
இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து, லாய்ட் ஆஸ்டின் கொரியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு பயணிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.