இந்தியா தீட்டிய ரகசிய திட்டம்: முக்கிய ஆதாரங்களை திரட்டியது கனடா
கனடாவில் தற்போது பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய தலைவர் படுகொலையில் இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்களை கனடா திரட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசாங்கத்திற்கு சம்பந்தம் இருப்பதாக கனடா அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியது.
இந்திய அதிகாரிகளின் குரல் பதிவு
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி வரும் நிலையில் இந்திய தூதரக அதிகாரிகள் வகுத்துள்ள திட்டம் மற்றும் உளவு அமைப்புகளின் செயற்பாடு உட்பட அனைத்து தரவுகளையும் கனடா சேகரித்துள்ளது.
அதேவேளை, இந்திய உயர் அதிகாரிகளின் குரல் பதிவுகளையும் கனடா அதிகாரிகள் சேகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரங்களை திரட்டும் விவகாரத்தில் கனடாவிற்கு நியூசிலாந்து, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகள் உதவியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
மேலும், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணம் தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்கக் கோரி கனடா அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்குச் சென்றதும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கனேடியர் படுகொலை
அத்துடன், கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்களை இந்திய அதிகாரிகள் தரப்பு மறுக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்தே, கனேடியர் படுகொலையில் இந்தியா கட்டாயம் ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் கனடாவுடன் ஒத்துழைத்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.