இந்தியா, கனடா விரிசல் : அலி சப்ரியின் நிலைப்பாடு
இலங்கையை போன்றே தற்போது எந்தவித ஆதாரமும் இன்றி சில குற்றச்சாட்டுக்களை இந்தியா மீதும் கனடா முன்வைப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கனடா எந்தவிதமான ஆதாரங்களும் இன்றி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார்.
இலங்கையில் இனப்படுகொலை
இதுகுறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவிக்கையில்,
“இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் சிலர் கனடாவில் பாதுகாப்பான புகலிடத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தநிலையில், கனேடிய பிரதமர் எந்தவித ஆதாரமும் இன்றி சில மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இலங்கைக்கும் கனடா இதே விடயத்தையே செய்தது.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயமாகும். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தநிலையில், கனடா பிரதமர் இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்” என்றார்.