தமிழர் விவகாரத்தில் இந்தியா கரிசனை
தமிழ் மக்களிற்கு 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அர்த்தமுள்ள அதிகார பகிர்வை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவேண்டுமெனவும், மாகாண சபைகளுக்குரிய தேர்தல்கள் நடத்தப்படவேண்டுமெனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், தமிழ் சமூகத்தின் சட்டரீதியான அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்றைய தினம் உரையாற்றியபோது, இந்திய தூதுவர் இந்திராமணி பாண்டே தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்லெட், சிறிலங்கா தொடர்பான தமது எழுத்துமூல அறிக்கையை நேற்றைய தினம், மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் முன்வைத்தார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றியபோது, தூதுவர் இந்திராமணி பாண்டே, இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்செட்டின் அறிக்கை, சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான முக்கியமான கரிசனைகளை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களிற்கு 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவேண்டுமென குறிப்பிட்ட இந்திய தூதுவர் இந்திராமணி பாண்டே, மாகாண சபைகளுக்குரிய தேர்தல்கள் நடத்தப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.
நண்பன் மற்றும் அண்டை நாடு என்ற அடிப்படையில், தமிழர்களின் பிரச்சினைகள் தீர்ப்பதில் உள்ள தமது கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது.
இந்த நிலையில், சர்வதேச சமூகத்துடன் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஈடுபாட்டுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
