உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா
உலகில் மிக துரிதமாக 10 கோடி கொரோனா வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசியை ஏற்றிய முதலாவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலைத் தாக்கம் தீவிரமடைந்துவரும் நிலையில், இந்த புதிய மைல் கல் எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இந்தியாவில் கொரோனாா வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசி மருந்தை ஏற்றும் நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
தற்போது வரை 100 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்தை இந்தியா ஏற்றியுள்ள நிலையில், இந்த மைல்கலை அந்த நாடு 85 நாட்களில் எட்டியுள்ளது.
அமெரிக்கா 89 நாட்களிலும் சீனா 102 நாட்களிலும் 100 மில்லியன் தடுப்பூசி மருந்தை ஏற்றிய நாடுகளாக பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
எனினும் இந்தியாவில் நாளொன்றில் கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அத்துடன் 800 ற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசி மருந்தின் தயாரிப்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
40 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்தாலும் இவ்வாரம் தடுப்பூசி மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஆறு மாநிலங்கள் கூறியுள்ளன.
எனினும் இதனை நிராகரித்துள்ள மத்திய அரசாங்கம், இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது என கூறியுள்ளது.
எதிர்வரும் ஜுலை மாதத்திற்குள் 250 மில்லியன் கொரோனா வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஏற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், தடுப்பூசி மருந்தை ஏற்றும் நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்படும் பட்சத்திலேயே இந்த இலக்கை எட்ட முடியும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வைத்தியசாலைகள் மற்றும் தடுப்பூசி மருந்தை செலுத்தும் மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை முன் களப் பணியாளர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குமே இதுவரை அதிகளவான கொரோனா வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.