உலக வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா: ரஷ்ய ஜனாதிபதி புடின் புகழாரம்
உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம்பெற இந்தியா தகுதிவாய்ந்தது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் (Russia) சோச்சி நகரில் நடைபெற்ற வால்டாய் டிஸ்கஷன் கிளப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்த தெரிவித்த அவர், இந்தியாவின் 150 கோடி மக்கள், உலகின் மற்ற எந்த பொருளாதாரத்தைவிட வேகமாக இருக்கும் வளர்ச்சி, பண்டைய கலாச்சாரம், வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் ஆகியவை காரணமாக உலக வல்லரசுகளின் பட்டியலில் இடம்பிடிக்க இந்தியா (India) தகுதியானது.
உலக வல்லரசுகளின் பட்டியல்
நாங்கள் இந்தியாவுடன் அனைத்து திசைகளிலும் உறவுகளை வளர்த்து வருகிறோம். ஒரு சிறந்த நாடான இந்தியா உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்டது.
150 கோடி மக்கள் தொகையுடன் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி மக்கள் அங்கு பிறக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. ரஷ்யா - இந்தியா உறவு எங்கு, எந்த வேகத்தில் வளரும் என்பது பற்றிய நமது பார்வை இன்றைய யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டது.
எங்கள் ஒத்துழைப்பின் அளவு ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. பாதுகாப்புத் துறையில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான தொடர்புகள் வளர்ந்து வருகின்றன.
எத்தனை வகையான ரஷ்ய ராணுவ உபகரணங்கள் இந்திய ராணுவத்தின் சேவையில் உள்ளன என்பதைப் பாருங்கள். இந்த உறவில் ஒரு பெரிய அளவு நம்பிக்கை உள்ளது.
சிறந்த நாடு
நாங்கள் எங்கள் ஆயுதங்களை மட்டும் இந்தியாவுக்கு விற்கவில்லை. நாங்கள் கூட்டாக வடிவமைக்கிறோம். பிரம்மோஸ் ஏவுகணை இதற்கு ஒரு உதாரணமாகும் வான், கடல், நிலம் ஆகிய மூன்று நிலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக நாங்கள் அந்த ஏவுகணையை மாற்றினோம்.
இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கான இந்தத் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இது பரவலாக எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த திட்டங்கள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் உயர் மட்டத்தை நிரூபிக்கின்றன.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லையில் சில சிரமங்கள் இருக்கின்றன. எனினும், புத்திசாலித்தனமான மற்றும் திறமையான அதன் தலைவர்கள் தங்கள் தேசங்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, சமரசங்களைத் தேடுகிறார்கள்.
இறுதியில் அவற்றைக் கண்டுபிடிப்பார்கள். இந்த அணுகுமுறை தொடர்ந்து வேகமெடுக்குமானால் சமரசங்களைக் காணலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |