இலங்கை வருகிறார் சாந்தன் : அனுமதி அளித்தது இந்திய அரசு
உடல்நலக்குறைவு காரணமாக தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய அரசு அளித்துள்ளது.
இதனால் இன்னும் 10 நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுவார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை
சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், அதேவேளையில் பிற பாதிப்புகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசு அனுமதி
இந்த நிலையில் சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை அனுப்பியுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
சாந்தன் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் விரைவில் முன்பதிவு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. சாந்தன் இலங்கை செல்வதற்கான அனுமதி கடிதத்தை திருச்சி கலெக்டருக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளது. இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் சாந்தன் அந்நாட்டுக்கு அனுப்பபடுவார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |