இலங்கைக்கு டோர்னியர் ரக கண்காணிப்பு விமானத்தை வழங்கிய இந்தியா
சிறிலங்கா விமானப்படையின் பாவனைக்காக இந்தியாவினால் டோனியர்-228 கடல் கண்காணிப்பு விமானமொன்று பதிலீடாக இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தின் வருடாந்த பராமரிப்பு சேவைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தல் மற்றும் அதற்கு மாற்றீடாக கடல்சார் கண்காணிப்பு டோனியர் விமானமொன்றை சிறிலங்கா விமானப்படைக்கு கையளிப்பதற்கான இன்று (16) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றுள்ளது.
அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கடல்சார் கண்காணிப்பு
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய கடற்படையின் டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் 2022 ஓகஸ்ட் 15 ஆம் திகதி இரண்டு வருட காலத்திற்கு இலங்கை விமானப்படையிடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒரு வருடம் தொடர் சேவையை முன்னெடுப்பதற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்ததோடு, விமானத்தின் வருடாந்த பராமரிப்புக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது.
அந்த விமானத்திற்கு மாற்றீடாக மற்றுமொரு டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.



