இந்தியாவின் அடுத்த அதிரடி : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில்(pakistan) இருந்து அனைத்து பொருட்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இறக்குமதி செய்வதை இந்தியா(india) உடனடியாக தடை செய்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவின்படி, தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கைகளை காரணம் காட்டி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஏற்றுமதிகளுக்கும் தடை
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில்,சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி பாகிஸ்தானில் இருந்து உள்வரும் அனைத்து ஏற்றுமதிகளையும் தடை செய்யப்படுகிறது. இந்தியாவின் வர்த்தக அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை பாகிஸ்தானுக்கு மொத்தம் 447.7 மில்லியன் டொலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது, அதே நேரத்தில் இறக்குமதி 420,000 டொலர்கள் மட்டுமே ஆகும்.
இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள்
பாகிஸ்தானுக்கு இந்தியாவின் ஏற்றுமதியில் மருந்துகள், பெட்ரோலியப் பொருட்கள், பிளாஸ்டிக், ரப்பர், கரிம இரசாயனங்கள், சாயங்கள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள், காபி, தேநீர், பால் பொருட்கள் மற்றும் தானியங்கள் ஆகியவை அடங்கும். இந்தியாவுக்கான பாகிஸ்தானின் ஏற்றுமதியில் முதன்மையாக தாமிரம், கண்ணாடிப் பொருட்கள், கரிம இரசாயனங்கள், சல்பர், பழங்கள் மற்றும் சில எண்ணெய் வித்துக்கள் உள்ளன.
இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 447.7 மில்லியன் டொலர்கள் என அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் மதிப்பிட்டாலும், இந்தியாவைத் தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவான குளோபல் டிரேட் ரிசேர்ச் இனிஷியேட்டிவ், உண்மையான வர்த்தக அளவு ஆண்டுதோறும் 10 பில்லியன் டொலர்கள் வரை இருக்கலாம் என்று மதிப்பிடுகிறது. கட்டுப்பாடுகளைத் தவிர்த்து,அதிக விலைகளைப் பெறுவதற்காக, பொருட்கள் பெரும்பாலும் மூன்றாம் நாடுகள் வழியாக அனுப்பப்படுகின்றன.
இந்தத் தடை இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே வரையறுக்கப்பட்ட வர்த்தக உறவுகளை மேலும் சீர்குலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
