வடக்கு கிழக்குக்கு இடைக்கால சபை - தலையெடுக்கும் இந்திய திட்டம்
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக நேற்று(15) சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது, இந்திய - இலங்கை ஒப்பந்த காலத்தில் இந்தியப் பெரியண்ணரால் தலைப்பாகை கட்டப்பட்டிருந்த சில முகங்களின் திட்டங்கள் தலையெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
அந்த வகையில், 1987 இந்தோ - சிறிலங்கா ஒப்பந்தத்திற்கு பின்னர் உருவாக்கப்பட்ட ஒன்றுபட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதல்வராக இருந்து, பின்னர் இந்தியப் படையினரின் வெளியேற்றத்துடன் இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்த வரதராஜப்பெருமாளின் செயலாளர் விக்னேஸ்வரனால் தயாரிக்கப்பட்ட இடைக்கால சபை என்ற விடயம் முன்னாகத்தப்பட தலைப்பட்டிருந்தது.
இடைக்கால சபை
இந்த விடயத்தை நேற்றைய பேச்சுக்களின் போது சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க பகிரங்கப்படுத்தியதுடன், வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்குரிய இந்த இடைக்கால சபையை ஆறு மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்திக் கொள்ளும் யோசனை ஒன்று தனக்கு கடந்த எட்டாம் திகதி கிட்டியதாகவும், இந்த யோசனைக்கு இன்னொரு முன்னாள் முதல்வரும் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரனும் இணக்கம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆக மொத்தம் இரண்டு விக்கிகள் எனப்படும் விக்னேஸ்வரன்களும் விரும்பிக்கொள்ளும் இந்தத் திட்டத்தின் பின்னால் இந்தியப் பெரியண்ணர் இருப்பதான ஊகங்கள் பலமாகவே உலா வருகின்றன.
ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை அவரும் இந்த இடைக்கால சபை என்ற விடயத்தை இடைச்செருகல் செய்து காலத்தை இழுத்தடிக்க விரும்புவது தெரிகிறது. இதனால் தான் இந்தத் திட்டத்தை 6 மாத காலத்திற்கு வடக்கு கிழக்கிற்கு நடைமுறைப்படுத்திக் கொள்வோமா என்ற ஒரு வினாவை நேற்று இடம்பெற்ற பேச்சுக்களின் போது தொடுத்திருந்தார்.
ரணில் இவ்வாறு இந்தக் கேள்வியை தொடுக்க நேற்றைய அமர்வில் பங்கெடுத்த முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனும் இந்த இடைக்கால சபைத் திட்டத்தில் உள்ள விடயங்களை விரிவாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்.
சூட்சுமத்தின் பின்னணி
இந்த நிலையில் தான் இந்த இடைக்கால சபை என்ற சூட்சுமத்தின் பின்னணியில் உள்ள விடயங்களில் சற்று உசாரடைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியன தமக்கிடையே வேற்றுமைகள் இருந்த போதும் அந்த வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இந்த யோசனையை உடனடியாகவே நிராகரித்தனர்.
இலங்கைத் தீவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதை தவிர்க்கவும், அதே சமகாலத்தில் வடக்கு கிழக்குக்குரிய இந்தப் புதிய திட்டத்தால் தமிழர்களை சமாளித்துக் கொள்ளவும் தனக்குரிய கால அவகாசத்தை இழுத்தடித்து இறுதியில் நாடாளுமன்றம் அனுமதிக்கவில்லை. இதனால் தமிழர்களுக்கு தன்னால் அரசியல் தீர்வை வழங்கிக் கொள்ள முடியவில்லை என்ற கருத்தியலை உருவாக்கும் வகையிலும் ரணில் நகரத் தலைப்படுகின்றார்.
இரட்டை இலக்குகளுடன் காலத்தை இழுத்தடிக்க ரணில் இந்த முறையைப் பிடிக்க முயன்றாலும், இதற்கு பிடி கொடுக்க தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியன தயாராக இல்லை என்பது நேற்றைய பேச்சுக்களின் போது பகிரங்கப்படுத்தப்பட்டது.
ஆயினும் இதே சமகாலத்தில், மாகாண சபைத் தேர்தலை நடத்திக் கொள்வது என்ற விடயத்தில் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் இந்தியப் பெரியண்ணருக்கும் பிடி கொடுக்க ரணிலும் தயாராக இல்லை என்பதும் தெரிகின்றது.
இதனால் நேற்றைய அமர்வில் முறையான முடிவுகள் எதுவுமே எடுக்கப்படாமல் அந்த அமர்வு முடிந்தருக்கிறது. எனினும் அடுத்த மாதம் (ஜூன்) சந்தித்துப் பேசுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
