புதிய பிரதமர் பதவியேற்கவுள்ள நிலையில் பிரித்தானியாவுக்கு விழுந்த பாரிய அடி - முன்னேறியது இந்தியா!
இந்தியா, பிரித்தானியாவை பின்னுக்குத் தள்ளி, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது.
அதனடிப்படையில், பிரித்தானியா ஒரு இடம் கீழிறங்கி, உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை தற்போது அடைந்துள்ளது.
இதேவேளை பட்டியலின் முதல் நான்கு இடங்களில், முறையே, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.
விலைவாசி உயர்வால் தடுமாறிக்கொண்டிருக்கும் பிரித்தானியாவில், புதிய பிரதமர் பொறுப்பேற்க இருக்கும் நிலையில், இந்த பின்னடைவு பிரித்தானியாவுக்கு மற்றொரு பாரிய அடியாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து வங்கியின் கணிப்பு
இவ்வாறான நிலையில், 2024 ஆம் ஆண்டு வரை பிரித்தானியா பொருளாதார பின்னடைவைச் சந்திக்கும் என இங்கிலாந்து வங்கி கணித்துள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரம், இந்த ஆண்டில் 7 சதவிகிதம் வளர்ச்சியடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 10 ஆண்டுகளுக்கு முன் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் பிரித்தானியா 5ஆவது இடத்திலும், இந்தியா 11ஆவது இடத்திலும் இருந்தன.
பிரான்சை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய இந்தியா
தற்போது இந்தியா ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிரித்தானியா ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் பிரான்சை பின்னுக்குத்தள்ளி உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடானது இந்தியா.
2021ஆம் ஆண்டின் இறுதிக்காலாண்டில் இந்தியா பிரித்தானியாவை முந்தியுள்ளது. இந்த கணக்கீடு, அமெரிக்க டொலர்கள் அடிப்படையிலானதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.