இலங்கையை சமாதானப்படுத்தவே கச்சதீவு கைமாற்றப்பட்டது! எம். பி ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு
இரு நாடுகளுக்கிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதை விட அதனை சரியாக நடைமுறைப்படுத்துவதில் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கச்சதீவு பிரச்சினை
"இந்திய தேர்தல் களமானது தற்போது சூடு பிடித்திருக்கிறது, பாஜக அரசாங்கம், கடந்த காலத்தில் செய்யப்பட்ட காங்கிரஸின் ஒப்பந்தங்கள் பிழையென சொல்கின்றது.
ஒரு நாட்டுக்கு நாடு செய்கின்ற ஒப்பந்தங்களில் பிழை சரி என்பதை விட அதை நடைமுறைப்படுத்துவதில் அவர்கள் அக்கறையாக இருக்க வேண்டும் .
விஷேடமாக கச்சதீவு பிரச்சினை இன்று முழுமையாக இந்திய அரசு தரப்பில் பேசப்படுகின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது. கச்சதீவை இலங்கைக்கு கொடுக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
அதாவது சிறீமாசாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டு 6க்கு நான்கு என்கின்ற அடிப்படையில் அவர்கள் அந்த ஒப்பந்தத்தை செய்துகொண்ட பிறகு இலங்கையை சமாதானப்படுத்துவதற்காகவே இந்த கச்சதீவை இலங்கைக்கு கொடுத்திருக்கின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கின்றது.
சட்டம் நடைமுறை
எனவே, இவ்வாறு கச்சதீவை மட்டும் பேசாமல் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு குடி பெயர்ந்த இந்திய வம்சாவளி மக்கள் பற்றியும் அவர்கள் ஆராய்ந்து ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அது மாத்திரமன்றி ராஜீவ் காந்தி - ஜே.ஆர் ஜெயவர்தன ஆகியோர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 13வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒப்பந்தமும் இன்னமும் எட்டப்படும் சாத்திய கூறுகள் எழவில்லை.
ஆக ஒரு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர அந்த ஒப்பந்தத்திலே என்னென்ன பிழைகள் இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டி அதனை தள்ளுபடி செய்வதோ அல்லது இழுத்தடிப்பதோ எந்த அரசாங்கத்திற்கும் அல்லது எந்த கட்சிக்கும் பொறுப்பல்ல, அதை இந்திய அரசாங்கம் புரிந்து செயற்பட வேண்டும்." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |