கச்சத்தீவு விவகாரம் : திமுகவை குற்றம்சாட்டும் பாஜக!
இலங்கைக்கு கச்சத்தீவு (Kachchatheevu) வழங்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசுக்கும் முக்கிய பங்கு உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை (Annamalai) குற்றம் சாட்டியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட ஆவணங்களைக் மேற்கோள்காட்டி அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “டெல்லியில் (Delhi) வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட விவகாரம் குறித்த விரிவான தகவல்களை செய்தியாளர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
இதுவரை கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவினர் பொய்யான தகவல்களையே கூறியுள்ளனர்.
தங்களுக்கு தெரியாமலே கச்சத்தீவு கொடுக்கப்பட்டதாகவும், இதைக் கண்டித்து கண்டனப் போராட்டங்கள் நடத்தியதாகவும், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு
ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் தமிழக மக்களை திமுகவினர் ஏமாற்றியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
கச்சத்தீவை தாரைவார்த்த விவகாரத்தில் இதுவரை காங்கிரஸ் கட்சியை மட்டுமே திமுக குறை கூறிவந்துள்ளது.
இதில் திமுகவுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நாங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளோம்.
பகிரங்க மன்னிப்பு
இந்த சம்பவத்தின்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு (M. Karunanidhi) தெரிந்தே தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டுள்ளது.
எனவே, காங்கிரஸ் மற்றும் திமுக, பொதுமக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
பாஜக ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவின் எந்த ஒரு பகுதியும் மற்ற நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கப்படவில்லை.
பின்னணியில் சதி
கடந்த 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி தமிழக முதல்வர் கருணாநிதியும், வெளியுறவுத் துறை அமைச்சரும் சந்தித்து பேசிய குறிப்புகள் வெளிவந்துள்ளன.
Excerpt of the Betrayal of Kalaignar Karunanidhi in the ceding of the Katchatheevu island to Sri Lanka.
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 1, 2024
This is just one of the many double standards of DMK. Some were exposed immediately, but this one took 50 years. pic.twitter.com/f9HG1oYKr5
ஒன்பது பக்கங்கள் கொண்ட அந்தக் குறிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கச்சத்தீவை கொடுப்பது குறித்து பேசலாம். இப்போது வேண்டாம் என கருணாநிதி கேட்டுள்ளார்.
பின் கச்சத்தீவை இலங்கையிடம் வழங்குவதற்கு கருணாநிதி சம்மதம் தெரிவித்ததோடு சிறிய அளவு போராட்டங்கள் செய்வதாகவும் கூறி 21 முறை கடிதம் எழுதி நாடகமாடியுள்ளார்.
மீட்பு நடவடிக்கை
இந்த நிலையில், கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும், வெளியுறவுத் துறை அமைச்சும் ஆராய்ந்து வருகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இது தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |