இலங்கையில் 15 மில்லியன் டொலர் செலவில் இந்தியாவின் திட்டம்
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிய போது விலைவாசி உயர்வினால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா, நிதியுதவி அளித்ததோடு உணவுப் பொருட்களையும் வழங்கியது.
மேலும் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் வகையில் பல்வேறு உதவிகளையும் இந்திய அரசு முன்னெடுத்தது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிவிப்பு
இந்நிலையில் இலங்கையில் முடங்கி இருந்த தொடருந்து துறைக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் இந்தியா ஐந்து இந்தியக் கடன்களுடன் (எல்ஓசி) 1 பில்லியன் டொலர் மதிப்பிலான திட்டங்களை இலங்கையில் நிறைவு செய்துள்ளது என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மேலும் சில மேம்பாட்டு பணிகளை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த வியாழக்கிழமை (21) கொழும்பில் உள்ள இந்திய உயர் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
இதன்போது இலங்கையின் வடமத்திய மாகாணமான அனுராதபுரத்திலிருந்து வடமேற்கு மாகாணத்தின் மாஹோ வரையிலான 66 கிலோ மீற்றர் தொடருந்து பாதைக்கு கிட்டத்தட்ட 15 மில்லியன் டொலர் செலவில் சமிக்ஞை அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே
இதேவேளை மேலும் மாஹோவில் இருந்து அனுராதபுரம் வரையிலான இலங்கை தொடருந்து பாதைக்கான சமிக்ஞை அமைப்பை வடிவமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் இயக்குவதற்கான ஒப்பந்தம் இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் IRCON Ltd நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.
அப்போது கருத்து தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்த திட்டம் 14. 90 மில்லியன் டொலர் செலவில் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மாஹோவில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட ஓமந்தை வரை 128 கிலோ மீற்றர் தூர தொடருந்து பாதையை 91.27 மில்லியன் டொலர் செலவில் மேம்படுத்தும் திட்டப் பணியையும் IRCON Ltd நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து பாதை புனரமைப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும், அனுராதபுரம் முதல் மாஹோ வரையிலான பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்றும் கோபால் பாக்லே கூறினார்.
மக்களின் பயணத்தை எளிதாக்க
இலங்கையில் மக்களின் பயணத்தை எளிதாக்கவும், வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை மீட்கவும் இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் சேர்ந்து இந்தத் திட்டங்களை விரைவுபடுத்தி வருவதாகவும் கோபால் பாக்லே தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்த போது பல வழிகளில் ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கும் இந்திய அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.
இலங்கையில் சமிக்ஞை கோளாறு, தொடருந்து பாதைகள் முறையான பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் கடந்த 2022ஆம் ஆண்டு 117 தொடருந்துகள் தடம் புரண்டன. இந்நிலையில் அந்நாட்டின் தொடருந்து துறையை மேம்படுத்த இந்தியா பல்வேறு நடவடிக்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.