இந்தோ - சிறிலங்கா படைக் கூட்டுப்பயிற்சி விரைவில் இடம்பெறும் சாத்தியம்
இந்தியாவும் சிறிலங்காவும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளதுடன், இரு தரப்பு அனுபவம் மற்றும் திறன்களை முழுமையாகப் பகிர்ந்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடலில் தமது செல்வாக்கை விரிவுப்படுத்த சீனா தொடர்ந்தும் முயன்று வரும் நிலையிலும், அமெரிக்க பாதுகாப்புக் குழுவின் அண்மைய சிறிலங்கா பயணத்தின் பின்னரும் இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா - சிறிலங்கா பாதுகாப்பு பேச்சுவார்த்தை

இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று இடம்பெற்ற 7ஆவது ஆண்டு இந்தியா - சிறிலங்கா பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளும் தங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்துள்ளன.
இந்தப் பாதுகாப்பு உரையாடலில் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்திய பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அர்மானே மற்றும் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பயிற்சிகளை மேம்படுத்த இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பயிற்சிகளின் அடிப்படையில் இருதரப்பினரும் அனுபவம் மற்றும் திறன்களை வளர்ப்பதற்கான தங்களின் உறுதிப்பாட்டை மேற்கொண்டுள்ளன.
இரு தரப்பு ஒத்துழைப்பு

இரு நாடுகளின் ஆயுதப் படைகளும் பல துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்புக்களை பெற தொடர்ந்தும் விரும்புவதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.
பேச்சுகளின்போது மேற்கொள்ளப்பட்ட பொதுவான ஒப்பந்தங்களின் அடிப்படையில் பேச்சுக்களை தொடர்ந்து மேற்கொள்ளவும், பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை மேலும் வலுப்படுத்தவும் இரு நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன.