சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்திய வெளியுறவுச் செயலாளர் விடுத்துள்ள வலியுறுத்தல்!
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல் உள்ளிட்ட 13 ஆம் திருத்தத்தின் கீழான ஏற்பாடுகளை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய வெளியுறவு செயலாளர் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ், அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா(Harsh Vardhan Shringla), மீண்டும் சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்களை அவர் வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், வான் மற்றும் கடல்வழி இணைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உட்பட, பரஸ்பர நன்மை பயக்கும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா அளிக்கும் முக்கியத்துவம் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான(Mahinda Rajabaksha) சந்திப்பில், யாழ்ப்பாணத்துடனான இந்தியாவின் கலாசார மற்றும் சிவில் உறவுகளை நினைவுகூர்ந்ததுடன், இந்திய நிதியில் நிர்மானிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாசார மையத்தைப் பராமரிக்க அரசாங்கத்துக்கு இந்தியா ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடனான(Basil Rajabaksha) சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஸ்திரமான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடன் மற்றும் மானியங்கள் உள்ளிட்ட கூட்டுத் திட்டங்களில் முன்னேற்றம் காண இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர். அதேநேரம், கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் முதலான பகுதிகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டார். திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை அவர் பார்வையிட்டார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முதலான கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்திற்கான தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யும் நல்லிணக்கத்திற்கான இந்தியாவின் நீண்டகால ஆதரவை, இந்திய வெளிவிவகார செயலாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.